Davos:
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்டப்பட தான் உதவி செய்ய தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் இதுபோல பல முறை சொல்லியிருந்தாலும், அவரது உதவியை மறுத்தே வந்துள்ளது இந்திய அரசு தரப்பு. தற்போது அவர் 4வது முறையாக காஷ்மீர் விவகாரத்தில் உதவி செய்ய தயார் என்று சொல்லி இருக்கிறார். அவர் இப்படிப் பேசும்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில வாரங்களில் ட்ரம்ப், இந்திய சுற்றுப் பயணம் வர உள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டேவோஸில் உலக பொருளாதார மாநாடு நடக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து இருநாட்டு உறவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்கள் காஷ்மீர் குறித்தும், அதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவு எப்படி இருக்கிறது என்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் உதவி செய்ய முடிந்தால், கட்டாயமாக உதவி செய்வோம். நாங்கள் காஷ்மீர் விவகாரத்தை மிக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,” என்று கூறினார்.
அப்போது இம்ரான் கான், “பல விஷயங்கள் குறித்து நாங்கள் பேச விரும்புகிறோம். அப்கானிஸ்தான் விவகாரத்தில் நாங்கள் ஒரே அணுகுமுறையைத்தான் கொண்டுள்ளோம். ஆனால், இந்தியா… அது மிகப் பெரிய விவகாரம். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையில் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா முயலும் என நம்புகிறோம். அமெரிக்காவால் மட்டும்தான் அது முடியும்” எனக் கூறினார்.
இந்திய சுற்றுப் பயணத்தின்போது பாகிஸ்தானுக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்கப்பட்டதற்கு ட்ரம்ப், “இப்போது அதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. ஆனால், இரு நாட்டுடனும் நல்ல உறவைப் பேணி வருகிறோம்,” என்றார்.